பட்டாவும் பொரம்போக்கும்

நேற்றிரவு நான் சாப்பிடுவதற்கு ஒரு வண்டிக்கடைக்கு சென்றேன். அந்த சாலிக்ராம சாலையில், ஒரு மிகப்பெரிய சினிமா நிறுவனத்தின் முன், சாலை விளக்கின் வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தது பிரியாணி வண்டி. ஒரு quarter பதினைந்து ரூபாய் என்றார் கடைக்காரர். கம கமவென்று வீசியது பிரியாணியின் மணம். ஒரு quarter வாங்கி, வண்டி அருகே நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

மஞ்சள் நிற மோட்டார்பைக்கில் காவலர் ஒருவர் வந்தார். பைக்கை வண்டி அருகே நிறுத்தி கடைக்காரரை பார்த்து கையை நீட்டினார். கடைக்காரர் மாமூல் பணத்தை தன் கால்சட்டைப்பையில் தேடினார். தேடத்தேட காவலருக்கு அவசரம்.

“சீக்கரம் கொடய்யா. கோயிலாண்ட போகணும்,” என்று கோபமாக கேட்டார்.

கடைக்காரர் பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கும்போது கேட்டார், “எங்க, அவர காணோம் இன்னிக்கு…?”

“பணத்த போய் வாங்கிட்டு வாயான்னு சொன்னா அந்த கைத மதியம் லீவு போட்டுட்டு போய்டுச்சு. பொரம்போக்கு நாயு,” என்று தன் சக காவலரை திட்டிக்கிட்டே பைக்கை கிளப்பினார்.

அவர் சென்றதும் கடைக்காரர் முகத்தில் ஒரு புன்னகை. “அது பொரம்போக்கு நாய்னா இது என்ன பட்டா போட்ட நாயா?” என்று கேட்டு சிரித்தார்.

அவர் அமைத்த வாக்கியத்தில் அவருக்கே பரம சந்தோஷம்!

சிறிது நேரத்திற்கு பின் மறுபடியும், “ஒண்ணு பொரம்போக்கு நாயு, இன்னொண்ணு பட்டா போட்ட நாயு. எடுக்கறது பிச்ச, அதுல இது வேற,” என்று சொல்லி, கையைத்தொடையில் தட்டி தலையை தூக்கி வானத்தை பார்த்து சிறித்தார்.

சுவையான பிரியாணியுடன் இலவச இணைப்பாக ஒரு மினி காமடி சீன்!

One thought to “பட்டாவும் பொரம்போக்கும்”

Leave a Comment